நான் கற்ற கல்வி
என் சமூக மக்களின்
விடுதலைக்குப்
பயன்படவில்லையெனில்
என்னை நானே சுட்டுக்கொள்வேன்
- புரட்சியாளர் அம்பேத்கர்.

Tuesday, April 17, 2012


சமூக நீதியும் மனுதருமமும்

சமூக நீதி என்கிற மகத்தான சொல் சிலரின் பெயருக்கு முன்னால் ஒட்டாக இருப்பதினாலேயே மலினப்பட்டுப் போயிருக்கிறது. சமூக நீதி என்பது சமநீதி என்கிற சொல்லைக்காட்டிலும் ஆயிரமாயிரம் மடங்கு அர்த்தம் பொதிந்த சொல்லாகும். சமமில்லாத இருவரை சமமாக நடத்துவது சம்மாகாது என்பதே சமூக நீதியின் அடிப்படை இலக்கணமாகும். ஒரு வறண்டு போன குளம் ஒரு இடத்தில் மேடாகவும், ஒரு இடத்தில் பள்ளமாகவும், ஒரு இடத்தில் நடுத்தரமாகவும் இருக்கும். அந்த ஏற்றத்தாழ்வான இடத்தை நீர் இட்டு சமமாக நிரப்ப வேண்டுமானால், ஆழமான இடத்தில் அதிகமான நீரையும் மேடான இடத்தில் குறைவான நீரையும் நடுத்தரமான இடத்தில் நடுத்தரமான அளவு நீரையும் விட்டு நிரப்ப வேண்டும்.

ஒரு கூட்டத்தில் இருக்கிற 100 பேருக்கு ஆளுக்கு 5 ரூபாய் கொடுப்பது சமத்துவமாக நடத்துவதற்கு ஒப்பானதாகும். ஆனால், ஒவ்வொருவரிடமும் ஏற்கனவே 5 ரூபாயோ 10 ரூபாயோ 50 ரூபாயோ 100 ரூபாயோ இருக்குமானால், அவர்களிடையே நிலவும் அசமத்துவம் நீடிக்கவே செய்யும். மாறாக, ஒருவருக்கு 95 ரூபாயும், ஒருவருக்கு 90 ரூபாயும், ஒருவருக்கு 50 ரூபாயும், ஒருவருக்கு ஒன்றுமே கொடுக்காமல் இருப்பது மேம்போக்காக சமத்துவமில்லாமல் நடத்துவதாக தோன்றினாலும் அதுதான் அந்த கூட்டத்தினரிடையே உள்ள அசமத்துவத்தைப் போக்கும். முதல் நடவடிக்கை சமநீதி என்றால், இரண்டாவது நடவடிக்கை சமூக நீதியாகும்.

ஏற்றத்தாழ்வு ஒன்றையே தனது அடிப்படையாகவும், இலக்கணமாகவும் கொண்டிருக்கிற, முடை நாற்றமெடுத்துப்போயிருக்கிற நீண்ட நெடிய காலமாக கெட்டி தட்டிப்போயிருக்கிற அசமத்துவ இந்திய சாதிய சமுதாயத்தை சீர்படுத்தும் நோக்கில் புரட்சியாளர் அம்பேத்கரும் கலகக்காரர் பெரியாரும் முகிழ்த்தெடுத்த கோட்பாடுதான் சமூக நீதிக்கோட்பாடு. சமூகநீதிக்கோட்பாட்டின் ஒரு துளி வெளிப்பாடுதான் இட ஒதுக்கீடு. இட ஒதுக்கீட்டோடு சமூக நீதி முடிந்து போகாது என்றாலும் சமூக நீதிக்கோட்பாட்டின் முதல் படியான இட ஒதுக்கீடே பல நிலைகளிலும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

அவ்வாறாக, சமூகநீதிக்கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்குபவர்கள், சமூக நீதிக்கோட்பாட்டினால் பலன் அடைந்தவர்களாக இருப்பதுதான் வேதனையாகும்.  

அதுபோக, சமூகநீதிக் கோட்பாடு என்பது நம்முடைய தலைவர்களின் கண்டுபிடிப்பு அல்ல. அது நம் கொள்கை எதிரிகளின் கண்டுபிடிப்பான மனுதருமக்கோட்பாட்டுக்கு பதிலடியாக கண்டுபிடித்ததே சமூக நீதிக் கோட்பாடாகும்.

அறிவியல் அடிப்படை ஏதும் இல்லாமல் பிறப்பின் அடிப்படையில் மனித குலத்தை நான்கு வருணங்களாக பிரித்ததோடு, ஒவ்வொரு வருணத்துக்கும் ஒவ்வொரு தொழிலை நிர்மாணித்து ஒவ்வொரு வருணத்தவரும் அவரவர் வருணத்திலேயே மண உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே மனுதருமம். அதற்கு நேர் மாறாக, எல்லா வருணத்தவரும் எல்லா தொழிலையும் செய்யலாம் என்பதற்கான அடித்தளத்தை அமைத்து தருவதே இட ஒதுக்கீட்டைத் தாங்கி நிற்கும் சமூக நீதிக்கோட்பாடாகும்.

இட ஒதுக்கீடு என்பது, காலம் காலமாக கல்வி மறுக்கப்பட்ட, இன்றைக்கு ஆதிக்க சாதிவெறியர்கள் என்று மீசை முறுக்கிக் கொள்கிற சூத்திரர்களுக்கும், பார்ப்பனீயத்துக்கு நேர் எதிரான வாழ்வியலை ஆரம்ப காலம் தொட்டே மேற்கொண்டு வந்ததால், சேரிகளில் சிறை வைக்கப்பட்டு தீண்டாமையையும் வன்கொடுமையையும் பரிசாகப் பெற்று வாழ்ந்து வருகிற பஞ்சமர்களுக்கும் ஒரு சில அரசு பதவிகளை உத்தரவாதப்படுத்துவதற்காகவோ, அதன் வாயிலாக அவர்களின் தனிப்பட்ட வாழ்வை வளமாக்குவதற்கோ, உருவாக்கப்பட்டது அல்ல.   

மாறாக, பார்ப்பனர் என்று அறியப்படுகிற வருணத்தவர் தொலைக்காட்சியிலும் வானொலியிலும் மரணச்செய்தி வாசிக்க வைக்கப்படுவதும், பஞ்சமர் என்று அறியப்படுகிற வருணத்தவர் இ.ஆ.ப அதிகாரியாக மாவட்ட நிர்வாகத்துக்கு தலைமையேற்க வைக்கப்படுவதும், சூத்திரர் என்று அறியப்படுகிற வருணத்தவர் நீதி சொல்கிற மன்றத்தில் தலைவராக அமர வைக்கப்படுவதுமே சமூக நீதிக்கோட்பாடாகும்.

ஆனால், இன்று இந்த வரலாற்றையெல்லாம் கற்றறியாமல், அதிகாரத்துக்கு வந்துவிட்ட சூத்திரர்கள் தங்களைப் படிக்க விடாமல் செய்த பார்ப்பன வருணத்தவர் மீது கோபம் கொள்ளாமல், சமூக நீதிக்கோட்பாட்டைத் தாங்கிப் பிடிக்காமல் மூளையால் பார்ப்பனர்களாக மாறி இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக இருக்கின்றனர்.

புரட்சியாளர் அம்பேத்கரும் கலகக்காரர் பெரியாரும் மறைந்து பல பத்தாண்டுகள் கடந்த பின்னரும் அந்த மகத்தான தலைவர்களுக்கான தேவை முடிந்து விடவில்லை. அவர்கள் தொடங்கி வைத்த சமூக நீதிக்கான போர் இன்று ஆதித்தமிழர்களான நம் கைகளில் இருக்கிறது. இந்தக் கருத்தியல் போரில் அரிவாளால் வெட்டுவதில் பயனில்லை. அறிவால் வெட்டுவோம் வாரீர்…!

-நீலவேந்தன்

ஏப்ரல் மாத ஆதித்தமிழன் இதழில் எழுதிய தலையங்கம்.

Wednesday, February 29, 2012

மாட்டுக்கறி
அரசியல்!
கடந்த
மாதம் நக்கீரன் வார இதழின் அட்டைப்படத்தில் வந்த ஒரு செய்தி கிட்டத்தட்ட தமிழ்நாட்டையே
உலுக்கிப்போட்டு விட்டது. “மாட்டுக்கறி தின்னும் மாமி” என்னும் தலைப்பில் தமிழக முதல்வரைப்பற்றி
வெளியான செய்தியைப் பார்த்தவுடன் அ.தி.மு.க வினர் நக்கீரன் அலுவலகத்தை அடித்து நொறுக்க,
ஆங்காங்கே நக்கீரன் இதழைக்கொளுத்த, தமிழ்நாடே பரபரப்பாகிப் போனது. நக்கீரன் மீதான தாக்குதலுக்குப்
பிறகு இது பத்திரிகை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றும் ஊடக சுதந்திரத்தின் மீதான
தாக்குதல் என்றும் ஒரு தரப்பினர் பேச ஆரம்பித்தனர். இன்னொரு தரப்பினரோ ஒரு தனிநபர்
மீது, அதுவும் ஒரு மாநில முதல்வர் மீது களங்கம் கற்பிக்கலாமா? ஊடக சுதந்திரம் என்ற
பெயரால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? பேச ஆரம்பித்தனர்.
ஆனால்,
ஒரு அம்பேத்கரிஸ்டாக இதில் நாம் பார்க்க வேண்டியது என்னவென்றால், இரண்டு தரப்பினரும்
ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொள்வது போலத் தோன்றினாலும் இருவரும் ஒரு கருத்தில் ஒற்றுமையாக
இருக்கின்றனர். அது, மாட்டுக்கறி சாப்பிடுவது கேவலம் என்பதில்தான். கருத்து சுதந்திரம்
பேசும் நக்கீரன், தமிழக முதல்வர் செய்யக்கூடாத பாவத்தை செய்தது போலத்தான் எழுதியது.
நக்கீரனுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்தவர்களில் தினமணியின் தலையங்கம் உள்பட அனைவரும்
முதல்வர் மாட்டுக்கறி சாப்பிடுவதாக எழுதுவது மன்னிக்க முடியாத அவதூறு என்றே சொன்னது.
உடல்
நலத்துக்கு கேடானது என்று அச்சடிக்கப்பட்டிருக்கிற பாட்டிலில் அடைக்கப்பட்டிருக்கிற
மதுவை அருந்துவது பாவமாக பார்க்கப்படுவதில்லை. ஆனால், எந்த சட்டத்தாலும் தடை செய்யப்படாத,
இந்தியத்துணைக்கண்ட மக்கள் தொகையில் கால் பங்கிற்கும் மேலான மக்களால் உண்ணப்படுகிற,
அமெரிக்க அதிபரின் விருந்திலும், இங்கிலாந்து அரச குடும்பத்து விருந்திலும் கட்டாயமாக
முதன்மையான இடம் பிடிக்கிற மாட்டுக்கறியை சாப்பிடுவது கேவலமாக பார்க்கிற இந்திய சமூகச்சூழலுக்கு
மிக முக்கிய காரணம் இங்கு உணவு பழக்க முறை சாதியத்தோடு முடிச்சு போடப்பட்டிருப்பதால்தான்.
மாட்டுக்கறி
தனிப்பட்ட முறையில் எந்தவொரு பாவமும் செய்யவில்லை, அது தலித்துகளால் சாப்பிடப்படுவதைத்
தவிர. இன்னும் சொல்லப்போனால், மலம் தின்னுகிற கோழியின் கறியை சாப்பிடுபவர்கள் தான்
புல் தின்னுகிற மாட்டின் இறைச்சியை சாப்பிடுபவர்களை கேவலமாக பார்க்கிறார்கள். மாட்டிறைச்சியைப்
போலவே ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிற மற்ற இரண்டு பொருட்கள் செருப்பும் துடைப்பமும்.
கத்தியால் குத்தப்பட்டாலோ, அரிவாளால் வெட்டப்பட்டாலோ, அதைப் பெருமிதமாக எடுத்துக்கொள்ளும்
சமூகம் காயம் கூட ஏற்படுத்திராத செருப்பால் அடிபட்டாலோ, துடைப்பத்தால் அடிபட்டாலோ,
இல்லை அடிப்பதாக சொன்னாலோ, உயிரே போய்விட்டதாக அவமானப்படுவதன் காரணமும் துடைப்பமும்
செருப்பும் செய்த எந்தவொரு தனிப்பட்ட குற்றத்தினாலும் அல்ல. அது தலித்துகளின் உழைப்புக்கருவியாக
இருப்பதினால்தான்.
முடை
நாற்றமெடுத்துப்போன சாதிய சமூகத்தில் தலித்துகள் மாத்திரமல்ல, தலித்துகள் சம்மந்தப்பட்ட
பொருட்களும் தீட்டாகிப்போனது. அறிவியல் அடிப்படை இல்லாத இந்த தீட்டுக்கற்பித்தலுக்கு
கம்யூனிஸ்டுகளும் பெரியாரிஸ்டுகளும் பலியாகிப்போனதுதான் ஆச்சர்யம். அறிவியல் நோக்கில்
மாட்டுக்கறியும் ஆட்டுக்கறியும் ஒன்றுதான் ஆனால் அறிவியலின் அடிப்படையால் உருவான கம்யூனிசத்தை
ஏற்றுக்கொண்டவர்களும் பகுத்தறிவின் விளைவான பெரியாரியத்தை ஏற்றுக்கொண்டவர்களும் உண்பதிலும்
குடும்ப நிகழ்வுகளிலும் அரசியல் நிகழ்ச்சிகளிலும் மாட்டுக்கறியை ஒதுக்கியே வைக்கின்றனர்.
ஒரு உணவுப்பொருளை, அதுவும் எளிமையாக கிடைக்கிற புரதச்சத்துமிக்க உணவுப்பொருளை அதன்
நன்மை தீமைக்காக ஒதுக்காமல், என்றைக்கோ கற்பிக்கப்பட்ட அறிவியல் அடிப்படை இல்லாத கற்பிதங்களின்
அடிப்படையில் ஒதுக்குவது முறையா என்று கருதிப்பார்க்க வேண்டும்.
அறிவியல்
மனப்பான்மை வளராமல், உணவுத்தீண்டாமை மட்டுமல்ல, எந்த பாகுபாடுகளும் ஒழியாது. ஒரு இடத்தில்
கீழ்க்கண்ட இரண்டில் ஏதோ ஒன்றுதான் இருக்க முடியும் அவை 1,அறிவு 2. சாதியக்கருத்தியல்.
சாதியக்கருத்தியலை
அடித்து நொறுக்கி அறிவைத்தழைக்கச் செய்தால் மட்டுமே ஒரு சமத்துவ சமுதாயம் அமைக்க முடியும்.
அப்படி ஒரு நீண்ட நெடிய போராட்டம் நடத்தவும் அந்தப்போரை தலைமையேற்க அம்பேத்கரிஸ்டுகள்
தயாராக வேண்டிய தருணமிது.
-நீலவேந்தன்.
கடந்த
மாத ஆதித்தமிழன் இதழில் தலையங்கமாக எழுதியது.

Wednesday, December 28, 2011

Thursday, November 3, 2011

தீண்டாமை (இல்லாத) தேசம்….!

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், அக்கரைப்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ளது மல்லையாபுரம் கிராமம். வழக்கமாக எல்லா சேரிகளையும் போலவே தலித்துகளுக்கு எதிரான ஆதிக்க சாதியினரின் பெயரையே தாங்கி நிற்கிறது மல்லையா (நாயக்கன்) புரம். மதுரையிலிருந்தும் தேனியிலிருந்தும் வரும் சாலை தாராபுரம் போகும் சாலையில் இணையும் இடமான செம்பட்டியிலிருந்து தோராயமாக 10 கி.மீ பராமரிப்பில்லாத குண்டும் குழியுமான சாலையில் பயணித்து, மல்லையாபுரத்தை நாம் அடைந்தோம்.

கடந்த 30.10.2011 அன்று தமிழகம் முழுதும் அனைத்து தேர்தல் அரசியல் கட்சி தலைவர்களாலும், தேவர் சாதியினராலும் கொண்டாடப்பட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் (தேவர்) குருபூஜையை மல்லையாபுரம் கிராமத்தில் வாழும் தேவர் சாதியினர் தலித்துகள் மீதான வன்முறைத்தாக்குதலோடு கொண்டாடி முடித்திருக்கிறார்கள்.

மல்லையாபுரம் கிராமத்தில், சுமார் 150 சக்கிலியர் குடும்பங்களும், 40 தேவர் குடும்பங்களும், சுமார் 350 நாயக்கர் குடும்பங்களும் வசிக்கின்றனர். சக்கிலியர்கள் விவசாயக்கூலிகளாகவும், சென்னை முதலான வெளியூர்களுக்கு சென்று பறையடிப்பதையும் தொழிலாக செய்து வருகின்றனர். தேவர் சாதியினர் திருப்பூர் உள்ளிட்ட வெளியூர்களில் வேலை செய்து கொண்டும், பால் கறவை மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்யும் தொழிலையும் மேற்கொண்டு வருகின்றனர். நாயக்கர்களிடம் தான் பெரும்பாலான நிலங்கள் உள்ளன, நாயக்கர்கள் விவசாய முதலாளிகளாக உள்ளனர்.

ஆண்டு தோறும் 30.10.2011 அன்று முத்துராமலிங்கன் பிறந்த நாளில் மல்லையாபுரத்தில் ஒரு தோட்டத்திலிருந்து முத்துராமலிங்கத்தின் படம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஊரின் மையப்பகுதியில் வைத்து கும்மியடித்து பூஜைகள் செய்யப்பட்டு கொண்டாடப்படுவதும், ஊர்வலத்தின் போதும் பூஜைக்கொண்டாட்டங்களின் போதும் உள்ளூர் சக்கிலியர்கள் இலவசமாக பறை அடிப்பதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது.

இந்த ஆண்டும் வந்து இலவசமாக பறை அடித்து தருவதாக தலித்துகள் ஒப்புக்கொண்டுள்ளனர். மாலை 4 மணிக்கு ஊர்வலம் கிளம்புகிற நேரத்தில் மழை பெய்து கொண்டிருந்ததால் தலித்துகள் பறை அடிக்க போகவில்லை. மைக்செட் மூலமாக தலித்துகளுக்கு பறையடிக்க தேவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். தலித்துகள் செல்போன் மூலமாக மழை பெய்து கொண்டிருப்பதால்தான் வரமுடியவில்லை என்றும் மழையில் அடித்தால் தப்பு கிழிந்து விடும் என்றும், எங்க பொழப்பே போய்விடும் என்றும், தகவல் சொல்லியனுப்பியுள்ளனர்.

ஓ! நாங்க சொல்ற நேரத்துக்கு நீங்க அடிக்க மாட்டீங்க? உங்களுக்கு வசதியான நேரத்துலதான் நாங்க சாமி கும்பிடணுமோ? என்று கேட்டு செல்போனை துண்டித்து விட்டனர். பறை முழக்கம் இல்லாமலேயே பூஜைக்கொண்டாட்டங்களை முடித்து விட்ட தேவர் சாதியினரில் சுமார் 40 பேர் கொண்ட கும்பல் தலித்துகள் வசிக்கும் தெருவுக்குள் புகுந்து வீடுகளை அடித்து நொறுக்கி, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவர்களை பெயர் சொல்லி தட்டி எழுப்பி, வீடுகளின் தாழ்வாரங்களில் கட்டி தொங்க விடப்பட்டிருந்த பறைகளை கிழித்து எறிந்து, இந்த தப்ப வெச்சுக்கிட்டுதானடா இந்த ஆட்டம் கட்டுறீங்க? என்று கேட்டுக்கொண்டே வீடுகளையும் தலித்துகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.

செல்போன் மூலமாக தலித்துகள் காவல் நிலையத்துக்கு தகவல் சொல்ல, உடனடியாக செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் கணேசனும், டி.எஸ்.பியும் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். முதலில் மைக்செட்காரரையும் மைக்செட்காரர் அடையாளம் காட்டிய 4 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். வழக்கம் போல ஆதிக்க சாதியினர் வாழும் பகுதிக்கு மட்டும் காவல் துறையினரை பாதுகாப்புக்கு நிறுத்திச் சென்றுள்ளனர். சம்பவ இடத்திலேயே தலித்துகளை விசாரித்த டி.எஸ்.பி, மறுநாள் பசும்பொன் குருபூஜைக்கு போய்விட்டு திரும்ப வருகிறவர்களுக்கு பந்தோபஸ்து அளிக்க வேண்டிய கடமை இருப்பதால், மறுநாள் மாலை 5 மணிக்கு மேல் காவல் நிலையம் வரச்சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

மறுநாள் மாலை 5 மணிக்கு தலித்துகள் காவல்நிலையம் சென்றுள்ளனர். ஆதித்தமிழர் பேரவை மாவட்ட அமைப்புச்செயலர் முருகன், மாவட்டத்தலைவர் ராசாராம், மாவட்ட அமைப்பாளர் சண்முகம், மாவட்ட பொறுப்பாளர் காளிராஜ், சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி பொறுப்பாளர் ஆப்ரஹாம் உள்ளிட்டோர் உடன் சென்றுள்ளனர்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளர் மைதீன்பாபு, ஆத்தூர் ஒன்றிய செயலாளர் அரசு, தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் கதிர் ஆகியோரும் காவல்நிலையத்தில் இருந்துள்ளனர்.

செம்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் கணேசன் தலித்துகளை நோக்கி, எழுத்து மூலமான புகார் தந்தால்தான் புகார் பதிவு செய்வேன்! என்னப்பா எழுத்து மூலமான புகார் தர்றீங்ளா என மிரட்டும் தொனியில் கேட்க, தலித்துகள் நேற்றே வாக்குமூலம் தந்தோமே என்று சொல்லியுள்ளனர். இடையில் குறுக்கிட்ட ஆதித்தமிழர் பேரவை மாவட்ட அமைப்புச்செயலர் முருகன் காவல்நிலைய ஆய்வாளரிடம், என்னங்கய்யா இது அநியாயாமாக இருக்கு? பாதிக்கப்பட்ட தலித்துகள் பகுதிக்கு பாதுக்காப்பு போடாமல் தாக்குதல் நடத்தியவர்கள் பகுதிக்கு பாதுகாப்பு போட்டிருக்கிறீர்கள்! நேற்றே வாக்குமூலம் பதிவு செய்துவிட்டு அதை வைத்தே F.I.R போடாமல், எழுத்து மூலமான புகார் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள் எனக்கேட்க, நீ ஒண்ணும் எனக்கு சட்டம் சொல்லித்தரவேணாம்!, இந்த மக்கள் (தலித்துகள்) ஒரு நாளும் ஒண்ணு சேந்து போய் அவங்கள (தேவர்களை) அடிச்சுர மாட்டாங்க! அவங்க ஒண்ணு சேந்து அடிச்சுரக்கூடாதேன்னுதான், அங்க போலீச நிறுத்தினேன்! என்று சொல்ல, பதிலுக்கு முருகன், தலித்துகள் ஒருநாளும் ஒண்ணு சேரமாட்டாங்கன்னு எப்படி நீங்களே முடிவு பண்ணலாம்? வாக்குமூலத்தை வைச்சே F.I.R போடலாம் ஆனா எழுத்துப்பூர்வமா புகார் வேணும்னு தலித்துகளை மிரட்டுறீங்க! உங்ககிட்ட நியாயம் கிடைக்கும்னு தெரியல! நாங்க எஸ்.பி ய பார்க்க போகிறோம் என்று சொல்லி விட்டு கிளம்ப, காவல்துறையினர் அங்கிருந்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினரை தலித்துகளிடம் பேசச்சொல்லியுள்ளனர்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் தலித்துகளிடம், எப்படியும் அவங்க நெலத்துக்குதான் வேலைக்குப் போயாகணும், அவங்கள பகைச்சுகிட்டு வாழ முடியுமான்னு யோசிச்சுப் பாருங்க! வேணுமுன்னா இனிமே, இப்படி அடிக்க மாட்டோம்னு அவங்க கிட்ட எழுதி வாங்கிக்கலாம்! என்று சொல்ல தலித்துகளும் அவ்வாறே எழுதிக்கொடுத்துவிட்டு வந்து விட்டனர். இதற்கிடையில், வீடுகள் நொறுக்கப்பட்ட காட்சிகளை எடுத்த சி.டியை தமிழன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாமல் இருக்க ஒரு கணிசமான தொகையை பெற்றுக்கொண்டு சி.டியை தேவர்களிடமே கொடுத்தது தனிக்கதை.

பிடியாணை வேண்டாக்குற்றங்களுக்கு யாருடைய புகாரும் தேவையில்லை என்கிற சட்டவிதிகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டு மனுதர்மத்தை மிகச்சிறப்பாகவே நடைமுறைப்படுத்தியுள்ளனர் காவல்துறையினர்.

நீலவேந்தன்.

Monday, October 3, 2011

ஆயினும் நாங்கள் அரசியல் கட்சிகளின் அடிமைகளே…!

உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், யாராவது இருவர் சந்தித்துக்கொண்டால், பேச்சின் மையப்பொருள் உள்ளாட்சி மன்ற தேர்தலாகத்தான் இருக்கும். கிராமங்களில் இருக்கும் தேனீர்க்கடைகளில் அமர்ந்து கொண்டு, ஜெயலலிதா யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும். விஜயகாந்த் என்ன செய்ய வேண்டும் என்று இலவச ஆலோசனை வழங்கிக் கொண்டிருப்பார்கள்.

ஏற்கனவே எல்லாம் நிறைந்து போயிருக்கிற ஆதிக்க சாதியினர் இவ்வாறு பேசுவதில் வியப்பொன்றுமில்லைதான். ஆனால், ஒரு நொடியைக் கூட மகிழ்ச்சியாக கடந்து விட முடியாத தலித்துகள் கூட இவ்வாறு தேர்தலைப்பற்றியே பேசி திளைப்பதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை. எனக்குத்தெரிய பல தலித் அரசு ஊழியர்கள், அன்னா ஹசாரே பற்றியும், பெட்ரோல் விலை உயர்வு பற்றியும் வாய் கிழிய மணிக்கணக்கில் பேசுகிறார்கள். உள்ளூரில் ஆதிக்க சாதியினருக்கான பிரச்னையிலும் இவ்வாறே மேலதிகமான தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள். திருப்பூரில் நிலவும் சாயப்பட்டறை பிரச்னைகளையும் அக்குவேறு ஆணிவேறாக அலசுகின்றனர். ஆனால் பரமக்குடி துப்பாக்கி சூட்டைப் பற்றிக் கேட்டால், உதட்டைப் பிதுக்குகிறார்கள். நாம் பேச ஆரம்பித்தால், சுற்றும் முற்றும் பார்த்து விட்டு இடத்தை விட்டு நழுவுவதிலேயே குறியாக இருக்கின்றனர்.

தனிநபர்கள் கூட ஊழல் போன்ற பிரச்னைகளை இந்திய அளவிலான விவாதப்பொருளாக மாற்றுவதில் வெற்றி பெறுகின்றனர். ஆனால், 25 கோடிக்கும் மேற்பட்ட தலித்துகளால், தங்கள் மீது திணிக்கப்பட்ட தீண்டாமை, வன்கொடுமை, இழிவு ஆகியவற்றை விவாதப்பொருளாக மாற்ற முடியவில்லை. தலித் தலைவர்களுக்கோ அடுத்தடுத்து வரும் தேர்தல்களே முக்கிய வேலைத்திட்டமாக மாறிவிடுகிறது.

சமூக மாற்றத்திற்காக பணியாற்றும் தலித் இளைஞர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சவாலான நாளாகவே தொடங்குகிறது.

கொங்கு மண்டலம் என்று ஆதிக்க சாதிவெறியர்களால், அழைக்கப்படும் தமிழகத்தின் மேற்கு மண்டலத்திற்கு ஒரு பெருமை இருப்பதாக வாய் கிழிய பேசிக்கொள்வார்கள். வார்த்திகளில் கூட மரியாதை இருப்பதாகவும், பண்பாடான மக்கள் வாழுகிற மண்டலம் என்று பெருமை பீற்றிக்கொள்வார்கள். ஆனால், உலக அரங்கில் எப்படி இந்தியா பாரம்பரியமான பண்பாடான நாடு என்று பீற்றிக்கொண்டாலும் அதன் முகமூடி அடிக்கடி கிழிந்து தொங்குமோ அதைப்போலத்தான் மேற்கு மண்டலத்தின் முகமூடியும் அடிக்கடி கிழிந்து தொங்கும். சமீபத்தில் மீண்டும் அவ்வாறு இரு இடங்களில் கிழிந்திருக்கிறது. வழக்கம்போல் முற்போக்கு, சமூகநீதி, சனநாயகம், சமத்துவம், புரட்சி பகுத்தறிவு, இன்னபிற பேசுபவர்கள் எல்லாருமே வாய்மூடி மௌனிகளாக அமைதியாக கடந்து செல்கின்றனர்.

கோவை மாவட்டம் சோமனூருக்கு அருகே உள்ள சாமளாபுரத்துக்கு பக்கத்து கிராமம் பரமசிவம்பாளையம் இங்கு குடியிருக்கும் கருப்புசாமி துரைசாமி இருவரும் விசைத்தறி தொழிலாளர்கள். இருவரும் 20.09.2011 அன்று சாபிடுவதற்காக பகவதியம்மன் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளனர். அங்கு ஏற்கனவே குடிபோதையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த இருபத்தாறே வயதான கவுண்டன் சிவசண்முகத்துக்கு எதிரில் அமர்ந்து சாப்பிட தொடங்கியுள்ளனர். பொறுக்குமா ஆதிக்க சாதி வெறியனுக்கு? இருவரையும் வாய்க்கு வந்த கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளான் சிவசண்முகம், சாப்பிட அனுமதித்த ஹோட்டல் முதலாளிக்கும் திட்டு. குடிபோதையில் உளறுகிறான் என்று அமைதி காத்தனர் கருப்புசாமியும் துரைசாமியும். குடிபோதையை மிஞ்சிய சாதிபோதையால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தனது செருப்பை எடுத்து கருப்புசாமியின் இலையில் வைத்து இதையும் சாப்பிடு என்று மிரட்டியுள்ளான். அவமானத்தால் கூனிக்குறுகிப்போன இருவரும் எழுந்து வெளியே போக முயல கருப்புசாமியை செருப்பால் அடித்து விட்டு அங்கிருந்து பேருந்து நிறுத்தம் போன இருவரையும் துரத்தி வந்து பேருந்து நிறுத்தத்தில் வைத்தும் செருப்பால் அடித்துள்ளான். பாதிக்கப்பட்டவர்கள் மங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிவசண்முகம் தற்சமயம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். தீக்கதிர் நாளிதழைத்தவிர எந்த நாளிதழும் இந்த செய்தியை பிரசுரிக்காமல் தங்களது சாதிப்பாசத்தை வெளிப்படுத்திக்கொண்டன. மனிதத்தின் மீது நடந்த இந்தப்பெரிய தாக்குதலுக்குப் பிறகும் கூட எந்தவொரு அரசியல் கட்சியும் கண்டனம் முழங்க தயாராய் இல்லை. தலித்துகளுக்கும் ஆயிரம் வேலைகள்! அவர்கள் ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்துக்கும் வாக்கு சேகரிக்க கிளம்பிவிட்டனர்.

இதுபோலவே, இன்னொரு சம்பவம், கோவை மாநகராட்சியை ஒட்டியுள்ள ஆலாந்துறைக்கு அருகில் உள்ளது நாதேகவுண்டன்புதூர். இங்கு வசித்துக்கொண்டு கட்டிட மேசனாக வேலை செய்து வரும் 24 வயதான சந்தோஷ்குமார் வேலைக்கு சென்றுவிட்டு திரும்ப வரும் வழியில் கடந்த 25ம் தேதியன்று மாலை 6 மணிக்கு ஆர் கே பேக்கரி முன் தனது வண்டியில் சாய்ந்து நின்று டீ குடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பதினெட்டே வயதான மணிகண்டன் என்கிற கவுண்டனுக்கு பொறுக்குமா? அதே இடத்தில் வைத்து சந்தோஷ்குமாரை தாக்கியுள்ளான். அங்கிருந்தவர்கள் தடுத்து சந்தோஷ்குமாரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சந்தோஷ்குமார் வீட்டுக்கு போய்விட்ட பின்னரும் சாதித்திமிர் அடங்காத மணிகண்டன் 15க்கும் மேற்பட்டோரை அழைத்துக்கொண்டு போய் சந்தோஷ்குமாரின் வீட்டுக்கே போய் வீட்டு முன் இருந்த படலைப் பிய்த்தெறிந்து சந்தோஷ்குமார், அவரின் தாயார் செல்வி, பெரியப்பா நஞ்சப்பன் மூவரையும் கடுமையாக தாக்கி 108 ஆம்புலன்சில் கொண்டு போய் மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்க்குமளவுக்கு காயப்படுத்தியுள்ளனர். தொலைபேசியில் பலமுறை புகார் கொடுத்தும் வராத காவல்துறை தலித் மக்களின் சாலை மறியலுக்குப் பிறகே வந்து சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது. மருத்துவமனை மட்டும் விதிவிலக்கா என்ன? அடிபட்டு வந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்காமல் தன் சாதி வக்கிரத்தை வெளிப்படுத்திக்கொண்டது.

இரண்டு சம்பவங்களிலுமே ஆழ்ந்து கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால், இரண்டு வன்கொடுமைக் குற்றவாளிகளுமே 26 வயதும் 18 வயதுமே ஆனவர்கள். இப்பல்லாம் யாருங்க சாதி பாக்குறாங்க? அதெல்லாம் பழைய காலத்து ஆளுங்க என்று சொல்பவர்கள் என்ன பதில் சொல்ல போகிறார்கள்? அதிலும் பாதிக்கப்பட்டவர்களை விட வன்கொடுமைக் குற்றவாளிகள் வயதில் இளையவர்கள்.

ஆனாலும் தலித்துகளே வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் பிரிவு 6ன்படி துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கோரி விடாதீர்கள். நீங்கள் வன்முறையாளர்கள் ஆகவும் பயங்கரவாதிகளாகவும் முத்திரை குத்தப்பட்டு தேசியத்தை பாதுகாக்க சிறைக்கதவுகளை திறந்து விடுவார்கள். ஜாக்கிரதை.